கதறி அழுத சிறுமி நீதிபதி வழங்கிய தண்டனை மன்னார் மேல் நீதிமன்றத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

share this..
வணக்கம் எமது பதிவுகள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் தவறுகள் ஏதும் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்

கதறி அழுத சிறுமி நீதிபதி வழங்கிய தண்டனை மன்னார் மேல் நீதிமன்றத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

மன்னார் மேல் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் தந்தையொருவர் 18 வயதிற்கு குறைந்த பிள்ளையொருவருக்கு உலோக கரண்டியை சூடாக்கி சுட்டதாக அதாவது சித்திரவதை செய்ததாக கூறி இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு 308A இன் கீழ் குற்றப்பகர்வு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கை தொடர்ந்து வாதாடா விரும்பாத தந்தை தான் குற்றவாளி என மன்றுரை செய்ததன் பின்னர் அவரின் மகளாகிய 14 வயது சிறுமியும் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

குறித்த தந்தை சார்பாக நீதிமன்றத்தில் சட்டத்தரணி டினேஸன் அஜராகியிருந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி எதிரியின் சொந்த மகள் எனவும் அந்த சிறுமி இன்றைய தினம் தனது தந்தையுடனேயே நீதிமன்றம் வந்துள்ளதாகவும், இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையென்றும் இவர் கடற்தொழில் செய்தே தனது குடும்பத்தை பராமரித்து வருவதாகவும் இவருக்கு சிறைதண்டணை விதிக்கபடும் சந்தர்ப்பத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த குடும்பம் அந்த சிறுமி உட்பட அனைவரும் பாதிக்கப்படுவார்கள், என்றும் ஒத்திவைத்த சிறைதண்டனையோ அல்லது தண்ட பணத்தினால் தண்டிக்குமாறும் விண்ணப்பத்தினை பதிவு செய்திருந்தார்.

வழக்குத்தொடுனர் சார்பாக தோன்றிய அரச சட்டத்தரணி அவர்கள் குறித்த குற்றச்சாட்டுக்கு தண்டணையாக 2 வருடங்கள் குறையாத 10 வருடங்களுக்கு மேற்படாத சிறைதண்டனை மற்றும் தண்டபணம் மற்றும் நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டுமென இலங்கை தண்டணைச்சட்டக்கோவையின் பிரிவு 308A(2) கூறுவதாகவும் ஆதலினால் கட்டாய சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்றும் ஒத்திவைத்த சிறை தண்டணை வழங்க முடியாது எனவும் உயர் நீதிமன்றத்தின் தீர்க்கப்பட்ட வழக்குகளை மேற்கொள்காட்டியும் சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்பதினை அரசியல் அமைப்பின் உறுப்புரிமை மற்றும் சர்வதேச சிறுவர் பாதுகாப்பு சமவாயத்தினையும் எடுத்துக்காட்டி அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டுமென விண்ணப்பம் செய்திருந்தார்.

இருபக்க விண்ணப்பத்தினையும் செவிமடுத்த கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதி அவர்கள் அந்த சிறுமியினை அழைத்து இந்த சம்பவத்திற்கு பிறகு வேறு எது துன்புறுதல் ஏற்பட்டதா என வினாவினார் அந்த சிறுமி இல்லையென்றும் அப்பா எங்களை நல்லா பார்த்துக்கொள்கின்றார் என்று கூறியுள்ளார்.

அதன்பின்னர் உங்களை யார் பார்த்துக்கொள்கின்றார் என கேட்க மழலை மொழியில் அப்பா தொழில் போய் உழைக்கின்றார் என்றும் நானும் தம்பி தங்கைகள் இருக்கின்றார்கள் என்றும் அம்மா வீட்டில்தான் இருக்கின்றார் என்றும் சிறுமி கூறியுள்ளார்.

இரு பக்க வாத பிரதிவாதங்களை ஆராய்ந்த கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதி அவர்கள், சட்டம் கட்டாயம் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று ஏற்பாட்டினை கொண்டிருந்தாலும் வழக்கின் தன்மை எதிரியின் குடும்ப நிலை என்பவற்றை கருத்தில் கொண்டு 2 வருட சிறை தண்டனை 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டும் 10000/- தண்ட பணமும் விதித்தார்.

தண்டப்பணத்தினை செலுத்துவதற்காக எதிரி சிறை கூண்டில் அடைக்கப்பட்டார். தனது தந்தை சிறையில் அடைக்கப்பட்டதினை பார்த்த சிறுமி நீதிமன்றத்தில் சத்தமிட்டு அழுதுள்ளார்.

அந்த நிலையில் அங்கிருந்த பெண் காவல்துறையினர் அச்சிறுமியை அழைத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார்.

மீண்டும் வழக்கும் அழைக்கப்பட்டது சிறுமியின் அழுகை நிற்கவில்லை கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதி அவர்கள் அச்சிறுமியை அழைக்குமாறு கூறினார். ஏன் அழுகின்றீர்கள் என வினாவினார், சிறுமி அப்பா வேண்டும் என்று கூறியுள்ளார்,

நீதிபதி அவர்கள் அழ வேண்டாம் அப்பா வருவார் அப்பாக்கு சிறை தண்டனை வழங்கப்படவில்லையென ஆறுதல் கூறினார்.

அதன் பின்னர் மன்றுக்கு கருத்து தெரிவித்த நீதிபதி அவர்கள் சட்டத்தில் கட்டாய சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டுமென கூறியிருக்கின்ற போதிலும் இவ்வாறான புற விடயங்களையும் அவதானிக்க வேண்டுமெனவும் சிறைத்தண்டனை விதிக்கபடும் பட்சத்தில் குடும்பம் மாத்திரமல்ல சிறுமியும் பாதிக்கப்படுமென கூறினார்.

குறித்த சம்பவம் நீதிமன்றத்தில் நெகிழ்ச்சியினை ஏற்படுத்திருந்தது.

share this..

Leave a Reply

Your email address will not be published.