நல்ல கணவன் கிடைக்க பெண்கள் அனுஷ்டிக்க வேண்டிய விரதம்

கண் நிறைந்த கணவனைப் பெறுவதற்குச் செய்யப்படும் விரதம் இது என்று கிராமத்து பெரியவர்களால் கூறப்படுகிறது. இந்த விரதம் குறித்து அறிந்து கொள்ளலாம். நல்ல கணவன் கிடைக்க பெண்கள் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் நல்ல கணவன் கிடைக்க பெண்கள் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் ஒவ்வொரு ஆடி மாத செவ்வாய்க்கிழமையையும் ஒரு திருநாளாகக் கொண்டாடுவது தென் பாண்டி நாட்டின் தனிச் சிறப்பு. அன்று கன்னிப் பெண்கள் கூடி ஊர்வலமாய் நதிக்கோ, வாய்க்காலுக்கோ, குளத்திற்கோ சென்று தெய்வ வழிபாடு செய்வார்கள். அன்று முழுவதும் நல்ல கணவன் கிடைக்க விரதம் இருப்பார்கள்.

கண் நிறைந்த கணவனைப் பெறுவதற்குச் செய்யப்படும் விரதம் இது என்று கிராமத்து பெரியவர்களால் கூறப்படுகிறது. பொழுது விடியும் முன்பே மணமாகாத பல பெண்கள் எல்லோரும் தெருக்கோடியில் கூடுவார்கள். ஒவ்வொருவர் கையிலும் ஒரு பனைநார் ஓலைப் பெட்டி அல்லது பிரம்புப் பெட்டி இருக்கும்.அதில் மாற்றுப் பாவாடை, சட்டை, மஞ்சள், குங்குமம், நாவற்பழம், வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவை இருக்கும். இவை தவிர நல்லெண்ணை, திரிநூல், சூடம், தீப்பெட்டியும் இருக்கும் . அவ்வூர் தெய்வங்களை நினைத்து பாடியபடியே நீர் நிலைகள் இருக்கும் இடங்களுக்கு செல்வர். எல்லோரும் ஒன்று கூடிச் செல்லும் போது மிக அழகாயிருக்கும். ஆற்றங்கரையை அடைந்ததும் கன்னிப்பெண்கள் எல்லோரும் நன்றாய்ப் பச்சை மஞ்சளைத் தேய்த்துக் குளித்து விட்டுப் புத்தாடை அணிவார்கள். புருவத்தின் மத்தியிலிருந்து வகிடு வரை பல்வேறு நிறங்களில் குங்குமத் திலகங்கள் இட்டுக் கொள்வார்கள். பாதங்களில் நலுங்கு மஞ்சளைப் பூசிக் கொண்டு பின் அருகிலுள்ள அரசடிப் பிள்ளையாரையோ அல்லது ஆலயத்திலுள்ள மூர்த்தியையோ கண்டு, நல்ல கணவனை அளிக்குமாறு பிரார்த்தித்து வழிபடுவார்கள். பின்பு தாங்கள் கொண்டு வந்த வாசனை மலர்களால் அர்ச்சித்து விட்டு, நாவல் பழத்தை நிவேதனம் செய்வார்கள்.

கற்பூரம் காட்டி வழிபட்டு நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுப்பார்கள். மீண்டும் எல்லோரும் ஒன்று கூடி வரிசையாய் நின்று பாடலைப் பாடிக் கொண்டு வீடு திரும்புவார்கள். வீட்டிற்கு சென்றதும் மாலையில் பொங்கல் வைத்து வழிபட்டு விரதம் முடித்து சாப்பிடுவார்கள். துருவிய தேங்காயும் சேர்த்துக் கொள்வார்கள். சில வீடுகளில் பலவித வடாம் பொரித்துப் சாப்பிடுவதும் உண்டு. கடைசி ஆடிச் செவ்வாய் அன்று வருடத்திற்கொரு முறை கிராமத்தில் உள்ள வசதி படைத்த வீட்டார்கள் முறைப்படி ஒவ்வொருவராக எல்லாக் குழந்தைகளையும் தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்று அவர்களை தெய்வமாக வழிபட்டு வடை, பாயசத்துடன் விருந்தளிப்பர்.

சிலர் புதிய பாவாடை, சட்டைகள் வாங்கிக் கொடுப்பதுண்டு. அதனுடன் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், மஞ்சள், இருபத்தைந்து காசு வைத்து கொடுப்பதும் சில தென்மாவட்ட கிராமங்களில் இன்றும் ஆடிச்செவ்வாய்களில் வழக்கமாக இருந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *